இது சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வமான இணையதளப் பக்கம்
வியாழன், 25 ஜனவரி, 2024
குடியரசு தினம்
வியாழன், 18 ஜனவரி, 2024
இந்தியாவில் இஸ்லாமும் இறைநேசர்களும்
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة
عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريح الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)
அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய நறுமணங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதன் விளக்கம்
.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்...
நீண்ட காலம் இந்தியாவில் இருந்த ஹஜருல்அஸ்வத் பிறகு நபிஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபாவை புதுப்பித்துக் கட்டும்போது இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தஃப்ஸீர் இப்னு கஸீரில் உள்ளது
عن ابن عباس رضي الله عنهما قال قال علي رضي الله عنه :أطيب ريح في الأرض الهند أهبط بها آدم عليه الصلاة و السلام فعُلِّق شجرُها من ريح الجنة (حاكم
عن علي رضي الله عنهما قال: خير واديين في الناس وادي بكة وواد بالهند الذي هبط به آدم ومنه يؤتى بالطيب الذي تطيبون به (كنز العمال
இரண்டு இடங்கள் சிறந்ததாகும். 1.மக்காவின் பள்ளத்தாக்கு 2.இந்தியாவில் ஆதம் அலை இறங்கிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து தான் நீங்கள் தடவிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள் கொண்டு வரப்படுகின்றன.
ஆதம் (அலை) இறங்கிய இடம் பற்றி வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடும் செய்தி
இந்த உலகின் முதல் மனிதரும், முதல் முஸ்லிமுமான நபி ஆதம் அலை இந்த பூமியில் அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தை ஒட்டியுள்ள இலங்கையின் ஸரந்தீப் எனும் மலையில் தான் இறக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடுகிறார். இவர் ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் பயணி ஆவார். இவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் இங்கிருந்து புறப்பட்டு சுமார் 24 வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69)النمل - قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ (20)العنكبوت
என்ற வசனங்களுக்கேற்ப இந்த பூமியின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை ரஹீலா என்ற பெயரில் நூலாக எழுதினார். அதில் அவர் குறிப்பிடும்போது நாங்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியதாக கூறப்படும் ஸரந்தீப் எனும் மலையை பார்த்தோம். அது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருந்தது. அதை கடலில் இருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாட்கள் தொலை தூரம் இருந்தது. எப்படியோ அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்கும் தாழ்வாக ஒரு மேகம் இருந்தது. அந்த மலையில் சில மரங்கள் இருந்தன. அதன் இலைகளோ பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது. அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனிதப் பாதங்கள் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது. நூல் துஹ்ஃதுன் னளாயிர், புன்யானுல் மர்சூஸ்
இந்தோனோஷியாவுக்கு அடுத்து உலகில் அதிகமான மஸ்ஜித்கள் இந்தியாவில் தான் உள்ளன
உலக நாடுகளில் முதலிடத்தில் இந்தோனோஷியாவில் சுமார் 7,40,000 ஏழு இலட்சத்து நாற்பதாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் ஆறு இலட்சம் மஸ்ஜித்கள் உள்ளன. மூன்றாவதாக பாகிஸ்தானில் சுமார் மூன்று இலட்சம் மஸ்ஜித்கள் உள்ளன. நான்காவதாக பங்களாதேஷில் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. ஐந்தாவதாக எகிப்தில் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் மஸ்ஜித்கள் உள்ளன. இப்படியாக பட்டியல் உள்ளது. சவூதியில் 94,000 மஸ்ஜித்கள் மட்டுமே உள்ளன.
நபி ஆதம் (அலை) அவர்களுக்குப் பின்னால் பல நபிமார்கள் இந்தியாவுக்கு வந்திருக்கக் கூடும்
குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம்
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الَعَزِيزُ الْحَكِيمُ (4)ابراهيم - وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا (36)النحل –
என்ற வசனங்களின் படி ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் நபிமார்களை அனுப்பாமல் இருக்கவில்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தமிழ் மிகவும் பழமையான மொழியாகும். நிச்சயமாக தமிழ் மொழியிலும் பல நபிமார்கள் வந்திருக்கலாம் என்பதை மேற்படி வசனங்கள் உணர்த்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இந்தியாவில் இஸ்லாம்
நபி ஸல் அவர்கள் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்களூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.
عن أبي سعيد الخدري رضي الله عنه قال : أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه و سلم جرة فيها زنجبيل فأطعم أصحابه قطعة قطعة و أطعمني منها قطعة (حاكم
அபூ ஸஈதுல் குத்ரீ(ரழி) அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் இருந்து ஒரு மன்னர் (சேரமான் பெருமான்) நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது இஞ்சி நிறைந்த ஒரு பையை அன்பளிப்பாகத் தந்தார். அதை அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தந்தார்கள். அதில் ஒரு பங்கை எனக்கும் தந்தார்கள். நூல்- ஹாகிம்
என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பான خير الله
பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம்.
இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு அடுத்த காலத்தில் இந்தியாவில் இஸ்லாம்
இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியே வணிகர்களாக தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை, நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற இஸ்லாமியக் கொள்கையால்
ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய இந்தியர்கள்
தென்னிந்தியாவில் மலபார் பிரதேசத்தில் இஸ்லாம் மிக வேகமாக பரவியது. காரணம் மலபார் ஹிந்துக்களிடையே வெகு காலமாக ஜாதி பாகுபாடு இருந்தது. அங்கு நாயர் வகுப்பினர் உயர் ஜாதி. புலயர் தாழ்ந்த ஜாதியினர். நாயர்கள் புலயர்களை அசூசையாக எண்ணுவார்கள். இதனால் நாயர் மீது புலயனின் நிழல் விழக்கூடாது என ராஜா உத்தரவிட்டிருந்தார். இதற்கு மாறு செய்யும் புலயர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இந்நிலையில் இஸ்லாம் தென்னிந்தியாவில் வந்தவுடன் தாழ்ந்த ஜாதி புலயர்களை அரவணைத்துக் கொண்டது. இஸ்லாத்தைத் தழுவியவுடன் அவர்களை யாரும் தாழ்வாக நடத்தவில்லை.
சுவாமி விவேகானந்தர் தனது நூலில் குறிப்பிடும்போது நம்முடைய இந்து மக்களில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றதற்குக் காரணம் முஸ்லிம்களின் நன்னடத்தை தான் என்று குறிப்பிடுவார். சுவாமி விவேகானந்தர் நபி ஸல் அவர்களைப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம் பசுவதை பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பினர் வந்து நாம் தெய்வமாக வணங்கும் பசுக்களை அநியாயமாக கொள்கிறார்களே என்று கூறினர். அதற்கு சுவாமி விவேகானந்தர் ஆங்காங்கே மனிதர்களை அநியாயமாக கொல்கிறார்களே அதைப் பற்றி நீங்கள் கவலைப் படவில்லையே என்று கூறிய போது மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட நிறையப் பேர் இருக்கிறார்கள்.ஆனால் பசுவைப் பற்றிக் கவலைப் பட யாரும் இல்லை. எனவே தான் நாங்கள் அந்த முயற்சியில் இறங்கியுள்ளோம் என்று அந்த அமைப்பினர் கூறினர். அதற்கு சுவாமி விவேகானந்தர் நான் மனிதனுக்குப் பிறந்தேன் எனவே மனிதனைப் பற்றிக் கவலைப்படுகிறேன். நீங்கள் எதிலிருந்து பிறந்தீர்கள் என்று புரியவில்லை என்றாராம்.
கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்து வழியாக இஸ்லாத்தின் வருகை
தென்னிந்தியாவில் இருந்து சில அனாதைச் சிறுவர்களும் சில விதவைப் பெண்களும் ஒரு பாய் மரக் கப்பலில் அரபு தேசத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கப்பல் சிந்து மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதி வழியாகத்தான் அரபு தேசத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது சிந்துவைச் சேர்ந்த சில கொள்ளையர்கள் அதனைத் தாக்கி முஸ்லிம் பெண்களையும் சிறுவர்களையும் கடத்திச் சென்று விட்டார்கள். அரபு தேசத்தை நோக்கி வந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு இப்படியொரு கொடுமை நடந்த விபரம் அப்போதைய அரபு தேசத்தின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபுக்கு தெரிந்தவுடன் அவர்களை விடுவிக்கும்படி சிந்து ராஜாவுக்கு கடிதம் எழுதினார். கடல் கொள்ளையர்கள் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று ராஜா பதில் எழுதி விட்டார். இந்த பதிலுக்குப் பின் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் நிர்பந்தமாக சிந்துவை நோக்கி படையை அனுப்ப நேர்ந்தது முதல் இரண்டு படையெடுப்பிலும் முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். மூன்றாம் படையெடுப்பில் முஸ்லிம் ராணுவத்திற்கு பதினேழு வயது நிறைந்த முஹம்மது இப்னு காசிம் தளபதியாக இருந்தார். அவரின் வீரத்தாலும், யுக்தியாலும் முஸ்லிம் ராணுவத்திற்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான். முஸ்லிம்கள் சிந்து முழுவதையும் கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு சிந்து மக்கள் அவர்களின் அரசர்கள் மூலமாக பல்வேறு அநீதிகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த விதம் அவர்களுக்கு மாபெரும் ஆறுதலாக இருந்தது. முஸ்லிம்களின் இந்த அனுகுமுறையைக் கண்டு இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மதவிஷயத்தில் யாரையும் நாங்கள் கட்டாயம் செய்யவில்லை விரும்பியவர் மட்டும் இஸ்லாமை ஏற்கலாம் என முஹம்மது இப்னு காசிம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். இதற்குப் பின்பு இஸ்லாம் இன்னும் வேகமாக வட மாநிலங்களில் பரவியது. இதில் அதிகம் பயனடைந்தவர்கள் ஜாட் வகுப்பைச் சார்ந்தவர்கள் தான். இவ்வாறு சிந்து பஞ்சாப் மற்ற மாநிலங்களிலும் இஸ்லாம் பரவியது.
இந்த முஹம்மது இப்னு காசிம் ரஹ் அவர்கள் தாயிஃப் நகரத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்படத் தக்கது. இதே தாயிஃபில் நபி ஸல் அவர்கள் கல்லடி பட்டு இரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் மலக்குமார்கள் நபி ஸல் அவர்களிடம் நீங்கள் ஒரு துஆ செய்தால் போதும் அல்லாஹ்வின் அனுமதியுடன் இந்த ஊரை இரு மலைகளுக்கிடையில் வைத்து நசுக்கி விடுகிறோம் என்று கூற, அதற்கு நபி ஸல் அவர்கள் இப்போது இவர்கள் இஸ்லாத்தை ஏற்கா விட்டாலும் இவர்களுக்குப் பின்னால் வரும் சமூகம் இஸ்லாத்தை ஏற்கும் என்றார்கள். அந்த தாயிஃப் நகரத்தைச் சார்ந்த முஹம்மது இப்னு காசிம் அவர்கள் தான் இந்தியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள்.
தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ அஜ்மீர் காஜா முஈனுதீன் சிஷ்தீ ரஹ் அவர்களும் முக்கியக் காரணம்
அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஷ்தீ ரஹ் அவர்கள் ஒவ்வொரு பிரயாணத்திலும் அதிகமான நபர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து விடுவார்கள். ஒருமுறை அவர்களுடைய ஒரு பிரயாணத்தில் வழமையை விட அதிகமான நபர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து விட்டார்கள். அதைப் பற்றி தன் தாயாரிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்ட தாயார் மகனே இந்தப் பெருமை உனக்குச் சொந்தமல்ல. மாறாக இந்தப் பெருமை எனக்கே சொந்தம் என்றார்கள். அதுகேட்ட காஜா முஈனுத்தீன் சிஷ்தீ ரஹ் அவர்கள் அன்னையே என்ன கூறுகிறீர்கள் என்று கேட்ட போது அன்னை கூறினார்கள் நீ குழந்தையாக இருந்த போது ஒவ்வொரு முறை உனக்குப் பாலூட்டும்போது அல்லாஹ்விடம் தொழுது துஆச் செய்து, என்னுடைய மகனை சிறந்த மார்க்க அழைப்பாளராக ஆக்கு என்று துஆச் செய்து விட்டுத் தான் உனக்குப் பாலூட்டுவேன். அந்த துஆவின் பிரதிபலனைத் தான் நீ தற்போது பார்க்கிறாய் என்று கூறினார்கள்.
படிப்பினை- இறைநேசர்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருப்பதாக கூறும் ஒவ்வொருவரும் இவற்றைச் சிந்திக்க வேண்டும். அந்த இறைநேசர்களை வார்த்தைக்கு வார்த்தை நினைவு கூறும் நாம் அவர்களைப் போன்று நமது பிள்ளைகளை வளர்த்துகிறோமா என்று சிந்திக்க வேண்டும். செல்போனில் சினிமாப் பாடல்களைக் காட்டித்தான் பல தாய்மார்கள் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுகிறார்கள். இறைநேசர்களை நேசிக்கிறோம் என்ற போலியான வாதம் மட்டுமே நம்மிடம் உள்ளது.
தென்னிந்தியாவில் ஏர்வாடி இப்றாஹீம் ஷஹீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் மூலம் இஸ்லாம் பரவிய வரலாறு
இவர்கள் மதீனாவில் நபிகளாரின் பரம்பரையில் ஹிஜ்ரி 528 கி.பி 1136 ல் பிறந்தார்கள். 25 வயதில் திருமணம் நடந்து சில ஆண்டுகளில் பாட்டனார் நபி ஸல் அவர்கள் கனவில் தோன்றி இந்தியாவில் இஸ்லாத்தைப் பரப்ப புறப்பட வேண்டும் என்ற கட்டளையின் படி சுமார் 3000 பேர்களுடன் இந்தியாவை நோக்கி புறப்பட்டார்கள். அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கி அங்கிருந்த படி தன் தோழர்களை பல பாகங்களுக்கும் அனுப்பி இஸ்லாத்தைப் பரப்பினார்கள். பிறகு அங்கிருந்து ஒரு குழுவாக குஜராத் மற்றும் பல மாநிலங்களுக்கும் சென்று அங்கும் இஸ்லாத்தை பரப்பினார்கள். மேற்காணும் இடங்களில் அவர்கள் பிரச்சாரம் செய்தபோது அவர்களுக்கு அந்தந்த அரசர்கள் மூலமாக ஏற்பட்ட இன்னல்கள் ஏராளம். பிறகு அங்கிருந்து தென்னிந்தியாவுக்கு புறப்பட்டார்கள். மலபார் பிரதேசத்தின் வழியாக வந்து அங்கும் இஸ்லாத்தை பரப்பி பின்பு ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி,கண்ணனூர் வழியாக காயல் பட்டணத்தை வந்தடைந்தார்கள்.
அந்நேரத்தில் நெல்லை பகுதியை ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியன் அங்குவந்து தங்கியுள்ள மக்கள் யாரென்று அறிந்து கொள்ள தூது அனுப்பினான். அதற்கு அவர்கள் தாம் யாரையும் நிர்பந்தப் படுத்தி மத மாற்றம் செய்ய இங்கு வரவில்லை என்றும் இஸ்லாமிய வழிமுறைகளை இந்த மண்ணில் அகிம்சை அடிப்படையில் எடுத்துக் கூறவே வந்துள்ளதாக பதில் கூற, அவன் எந்த இடையூறும் செய்யவில்லை. இதன் பின்பு மதுரை நகரில் தீன் பணி செய்ய தன் தொண்டர்களுடன் சென்று மதுரை மண்ணின் அரசன் திருப்பாண்டியனிடம் அனுமதி கேட்க, அவன் இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து இவர்களுடன் போர் புரியவும் தயாராகி விட்டான். நிர்பந்தமாக நடந்த இப்போரில் திருப்பாண்டியனின் படை தோல்வியைத் தழுவியது. குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று அவன் தஞ்சம் புகுந்தான். இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்கள் மதுரைக்கு முழுப் பொறுப்பு ஏற்றதுடன், தனது 13 கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். பாண்டிய மன்னர்கள் பலரிடம் போரிட்டு வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் வந்த காரியம் ஓரளவு நிறைவேறிய திருப்தியில் குடும்பத்தை விட்டு வந்த தோழர்களை திரும்பவும் அரபகத்துக்கு சிறிது சிறிதாக இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த வேளையில் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் தனது ஒற்றர்கள் மூலம் இந்த நிலையை புரிந்து கொண்டு மீண்டும் தன் படையுடன் தமிழகம் வந்தான். அப்போது இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்களின் படையில் பலர் மக்காவுக்கு திரும்பி விட்டதால் அவன் இலகுவாக மதுரையை வெற்றிகொண்டு, பின்பு இப்றாஹீம் ஷஹீத் ரஹ் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர் கொண்டான். மீதமிருந்த சிறு படையுடன் ஷஹீத் ரஹ் அவர்கள் உச்ச கட்டப் போரில் இறங்கிய போது அவர்களுடைய குதிரையின் கால்களை அவன் வெட்டினான். உடனே பதிலுக்கு ஷஹீத் அவர்கள் அவனின் தோல் புஜங்களை வாளால் வெட்டினார்கள். இத்தாக்குதலால் மயங்கி விழுந்த அவன் சிறிது நேரத்தில் தெளிவு பெற்றான். இருப்பினும் அவன் மயக்கத்தில் இருப்பது போல் நடித்து சற்றும் எதிர் பாராத விதமாக ஷஹீத் ரஹ் அவர்களின் மார்பில் தாக்கினான். இத்திடீர் தாக்குதலால் இப்றாஹீம் ஷஹீத் ரஹ் அவர்கள் வீர மரணம் அடைந்தார்கள். அவர்களின் உடல் ஏர்வாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் தங்கியிருந்தபோது அரபகத்து மண்ணின் ஒரு பகுதியின் பெயரான ஏர்பாத் என்ற பெயரை ஷஹீத் அவர்கள் தான் சூட்டினார்கள். அதுதான் ஏர்வாடி என்றானது.
(தகவல் முஅஸ்கருர் ரஹ்மான் கல்லூரி ஆண்டு மலர்)
இந்தியாவில் நாகூர் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களின் மூலம் இஸ்லாம் பரவிய வரலாறு
உத்தரப்பிரதேசத்தில் மாணிக்கபூர் எனும் ஊரில் ஹிஜ்ரி 910 ம் ஆண்டு அஷ்ஷைகு அப்துல் காதிர் ஜீலானீ ரஹ் அவர்களின் 9 வது பரம்பரையில் பிறந்தவர்கள் தான் நாகூர் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள். 18 வயதில் டில்லி அருகே உள்ள குவாலியர் எனும் நகரத்திற்குச் சென்று மகான் முஹம்மது கெளது ரஹ் அவர்களிடம் தீனைக் கற்றார்கள். அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்லும்போது கெளது ரஹ் அவர்கள் தனது 400 மாணவர்களையும் ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களிடம் ஒப்படைத்து இன்றுமுதல் இவர்கள் அனைவரும் உம்முடைய மாணவர்களாக ஆகி விட்டார்கள் என்று கூறி துஆ செய்து அனுப்பினார்கள்.
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கம் மேலோங்கி விடக்கூடாது என்பதற்காகவே கிபி 1336 ல் ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் விஜயநகரம் உருவாக்கப்பட்டது.கிபி 1500 ல் அந்நகரம் இந்துக்களின் புனித நகரமாக கருதப்பட்டது. அத்தகைய புனித நகரத்திற்கு ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் முக்கியமான திருவிழா நேரத்தில் தனது 400மாணவர்களுடன் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக வந்தபோது அத்தகவல் உடனே மன்னருக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னர் அங்கு வந்த போது ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களின் முகத்தோற்றம் மன்னரை பல்லக்கில் இருந்து இறங்கச் செய்து விட்டது இருப்பினும் தன் தளபதியை ஏவி வந்த விஷயத்தை கேட்கச் சொன்ன போது அத்தளபதி ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்களிடம் நீங்கள் யார் திடீரென்று மன்னரின் எல்லையில் வந்து நுழைவதின் நோக்கம் என்ன என்று கேட்க, ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் மன்னரிடம் நாங்கள் இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக வந்துள்ள்ளோம். ஆனால் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்ய மாட்டோம் என்று பணிவுடன் கூறினார்கள். அது கேட்ட மன்னர் நீங்கள் மதப்பிரச்சாரம் செய்வதற்கு இதுவல்ல இடம் இங்கிருந்து உடனே திரும்புங்கள். அல்லது திருப்பப் படுவீர்கள் என்றார் அதற்கு ஷைகு அவர்கள் நாங்கள் உங்களின் திருவிழாவில் எந்த குழப்பமும் ஏற்படுத்த மாட்டோம். எங்களை இந்த ஊருக்குள் இருக்க அனுமதித்தால் போதும் என்று கூறினார்கள் அதற்கு மன்னர் மரியாதையாக இங்கிருந்து வெளியேறுங்கள். என்று மிரட்டிய போது ஷைகு அவர்கள் கடும் கோபத்தோடு மன்னரை ஒரு பார்வை பார்த்து விட்டு, பிறகு அதே கோபப்பார்வையோடு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த விருபாட்சா கோவிலைப் பார்த்தார்கள். அவ்வளவு தான் அதன் உச்சிக் கோபுரம் சரிந்து விழுந்தது. ஏதோ மந்திரம் செய்து விட்டார் என எல்லோரும் பயந்தனர் மன்னரின் வாய் அடங்கியது. இருப்பினும் ஷைகு அவர்களைக் கொல்ல பலமுறை அவர் முயன்றார். முடியவில்லை இறுதியில் மன்னரின் உத்தரவின் பேரிலேயே அங்கு ஒரு மஸ்ஜித் உருவாகும் நிலை ஏற்பட்டது.
ஷியாக்களைத் திருத்திய ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள்.
ஷாஹுல் ஹமீத் வலிய்யுல்லாஹ் அவர்கள் பீஜப்பூர் சென்றிருந்த போது அங்கு ஷியா கொள்கை உள்ள இஸ்மாயில் ஆதில் ஷா என்பவர் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தார் ,ஷைகு அவர்கள் தோழர்களுடன் அங்குள்ள ஒரு மஸ்ஜிதில் தொழச் சென்ற போது அங்குள்ள இமாம் சுன்னத் வல் ஜமாஅத் என்றாலும் மன்னரின் அடக்கு முறைக்கு பயந்து இதுநாள் வரை, ஷியா முறையில் தொழுகை நடத்தி வந்தார். ஷைகு அவர்களைக் கண்டதும் மனசாட்சி இடம் தராமல் “வருவது வரட்டும்” என்றெண்ணி சுன்னத் வல் ஜமாஅத் முறைப்படி தொழ வைக்க உடனே அங்கு வந்திருந்த மன்னர் வெகுண்டெழுந்தார். அரசுக்கு கட்டுப்படுவதாக இருந்தால் இங்கு இரு! இல்லையென்றால் பதவியை விட்டு விலகு என்று கண்டித்தார். அதைக் கண்ட இமாம் திகைத்து விட்டார். உடனே ஷைகு அவர்கள் எழுந்து மிஹ்ராபில் நின்று அல்லாஹ்வின் இடத்திலே அரசு நுழைய இடம் கிடையாது என்று கூறி தனது சொற்பொழிவை தொடங்கி ஷியாக்களின் தவறான கொள்கையை மக்களுக்கு சுட்டிக் காட்டிய போது மந்திரிகள் உட்பட மக்கள் அனைவரும் திருந்தினார்கள் ஆனால் மன்னர் திருந்தவில்லை. ஆத்திரத்தப்பட்ட மன்னர் தன் வாளை எடுத்து ஷைகு அவர்கள் நின்றிருந்த மிஹ்ராபை நோக்கி வீச அது ஷைகு அவர்களின் .தோளுக்கு மேலே பறந்து சுவற்றில் பட்டு வீசப்பட்ட பந்து திரும்புவது போல திரும்பி மன்னரின் நெஞ்சில் பாய்ந்தது அங்கேயே அவர் இறந்தார் அன்று மஃரிபுக்கு முன்பே அவரை அடக்கப்பட்டது.
தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்
முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...
-
24 -வது தராவீஹ் ஒரு பெண் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமான இருபெண்களையும் ஒர...
-
06-12-2024 جمادي الثانية 3 بسم الله الرحمن الرحيم மஸ்ஜித்களை பாதுகாப்போம் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவர...
-
18-ம் தராவீஹ் பயான் عَنْ أَنَس رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قَالَ رَسُول اللَّه صَلّ...