வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

இந்திய முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு

 

இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதைப் பற்றி பேசுவதற்கு முன்பு இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமான பூர்வீகமான தொடர்பைப் பற்றிப் பேச வேண்டும். சில அறிவற்றவர்கள் கூறுவது போன்று இந்திய முஸ்லிம்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல என்பதை அடிக்கடி பதிய வைக்க வேண்டும்.

தான் பிறந்த சொந்த ஊரை சொந்த நாட்டை நேசிப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்

وأخرج الأزرقي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لما خرج من مكة « أما والله اني لأخرج وإني لأعلم أنك أحب البلاد إلى الله وأكرمها على الله ، ولولا أن أهلك أخرجوني منك ما خرجت » .وأخرج الترمذي عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم لمكة « ما أطيبك من بلدة وأحبك إليّ ، ولولا أن قومك أخرجوني ما سكنت غيرك (در المنثور

  நபி ஸல் அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது மக்காவை நோக்கிப் பேசுவது போல பின்வரும் வார்த்தையைச் சொன்னார்கள். ஊர்களிலேயே எனக்குப் பிரியமான ஊராகிய மக்கா என்ற உன்னை விட்டும் நான் வெளியேறுகிறேன். நிச்சயமாக உன்னிடம் வசிப்பவர்கள் என்னை வெளியேற்றியிருக்கா விட்டால் நான் ஒருபோதும் வெளியேறியிருக்க மாட்டேன்.   

இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உள்ள தொடர்பு  பூர்வீகமானது

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ (38)البقرة

.وَقَالَ السُّدِّيّ : قَالَ اللَّه تَعَالَى" اِهْبِطُوا مِنْهَا جَمِيعًا " فَهَبَطُوا وَنَزَلَ آدَم بِالْهِنْدِ وَنَزَلَ مَعَهُ الْحَجَر الْأَسْوَد وَقَبْضَة مِنْ وَرَق الْجَنَّة فَبَثَّهُ بِالْهِنْدِ فَنَبَتَتْ شَجَرَة الطِّيب فَإِنَّمَا أَصْل مَا يُجَاء بِهِ مِنْ الطِّيب مِنْ الْهِنْد مِنْ قَبْضَة الْوَرَق الَّتِي هَبَطَ بِهَا آدَم وَإِنَّمَا قَبَضَهَا آسِفًا عَلَى الْجَنَّة حِين أُخْرِجَ مِنْهَا (تفسير ابن كثير

 நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்தியாவில் இறங்கினார்கள். அவர்களுடன் ஹஜருல் அஸ்வத் கல்லும் சிறிதளவு சுவனத்தின் இலைகளும் இறங்கின. அந்த இலைகளை இந்திய மண்ணில் தூவினார்கள். அதனால் நறுமண மரங்கள் உருவாயின. நபி ஆதம் இவற்றையெல்லாம் சுவனத்தில் இருந்து கொண்டு வருவதற்குக் காரணம் சுவனத்தை விட்டும் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதால் தான்... 

விளக்கம்- அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த இலங்கையில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கினார்கள் என்றால் இன்று அது இந்தியாவில் இல்லையே பிறகு எப்படி நாம் அதைப் பற்றிப் பெருமையாகப் பேச முடியும் என்று சிலர் கேட்கலாம். ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியது வேண்டுமானால் இலங்கையாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பல அடையாளச் சின்னங்கள் இன்றும் இந்தியாவில் தான் உள்ளன. உதாரணமாக இராமேஸ்வரத்தில் உள்ள  ராமர் பாலம்  என்பது இன்று வரை ஆதம் பாலம் என்றே இந்திய வரை படங்களில் உள்ளது. சேது சமுத்திரத் திட்டம், சேதுபதி மன்னர்கள் என்றெல்லாம் கூறும்போது அந்த சேது என்பது நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ஷீத் அலைஹிஸ்ஸலாம் என்பதிலிருந்து மருவி வந்ததாகும். ஹாபீல், காபீல் உடைய அடக்கஸ்தலம்  இராமேஸ்வரத்தில் உள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

عن ابن عباس قال قال علي بن أبي طالب إني لأعلم أحب بقعة إلى الله في الأرض وأفضل بئر في الأرض وأطيب أرض في الأرض ريحا فأما أحب بقعة إلى الله في الأرض فالبيت الحرام ( وما حوله ) وأفضل بئر في الأرض زمزم وأطيب أرض في الأرض ريحا الهند هبط بها آدم عليه السلام من الجنة فعلق شجرها من ريح الجنة (التمهيد)

 அலீ ரழி அவர்கள் கூறினார்கள். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு எது என்பதையும் இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு எது என்பதையும் இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் எது என்பதையும் நான் அறிவேன். இந்த பூமியின் நிலப்பரப்புகளில் மிகச் சிறந்த நிலப்பரப்பு ஹரம் ஆகும். இந்த பூமியின் கிணறுகளில் மிகச் சிறந்த கிணறு ஜம்ஜம் கிணறு ஆகும். இந்த பூமியின் நறுமணங்களில் மிகச் சிறந்த நறுமணம் இந்தியாவின் நறுமணம் ஆகும். அங்கு தான் நபி ஆதம் அலை அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் நறுமண மரங்கள் சுவனத்தின் நறுமணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

  இந்த உலகின் முதல் மனிதரும், முதல் முஸ்லிமுமான நபி ஆதம் அலை இந்த பூமியில் அன்றைய இந்தியாவின் ஒரு அங்கமான தமிழகத்தை ஒட்டியுள்ள இலங்கையின் ஸரந்தீப் எனும் மலையில் தான் இறக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதா குறிப்பிடுகிறார். இவர் ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் பயணி ஆவார். இவர் மொராக்கோவைச் சேர்ந்தவர் இங்கிருந்து புறப்பட்டு சுமார் 24 வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து     

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ (69)النمل -  قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ (20)العنكبوت

என்ற வசனங்களுக்கேற்ப இந்த பூமியின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்து தனது அனுபவத்தை ரஹீலா என்ற பெயரில் நூலாக எழுதினார். அதில் அவர் குறிப்பிடும்போது நாங்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறங்கியதாக கூறப்படும் ஸரந்தீப் எனும் மலையை பார்த்தோம். அது கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமாக இருந்தது. அதை கடலில் இருந்து நாங்கள் பார்த்த போது எங்களுக்கும் அதற்கும் இடையில் 9 நாட்கள் தொலை தூரம் இருந்த து. எப்படியோ அதில் நாங்கள் ஏறிய போது எங்களுக்கும் தாழ்வாக ஒரு மேகம் இருந்த து. அம்மலையில் சில மரங்கள் இருந்தன. அதன் இலைகளோ பூக்களோ உதிர்வதில்லை. அங்கு ஃபஸீஹ் என்றொரு இடம் உள்ளது.அங்குள்ள ஒரு உயரமான கரும்பாறையில் ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் புனிதப் பாதங்கள் சுவடுகள் காணப்பட்டன. அந்த இடம் மட்டும் சிறிது பள்ளமாக காட்சியளித்தது             

நூல் – துஹ்ஃதுன் னளாயிர், புன்யானுல் மர்சூஸ் பக்கம் 57

நபி ஆதம் அலை அவர்களுக்குப் பின்னால் பல நபிமார்கள் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கலாம்

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الَعَزِيزُ الْحَكِيمُ (4)ابراهيم –

 وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا (36)النحل –

என்ற வசனங்களின் படி ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் நபிமார்களை அனுப்பாமல் இருக்கவில்லை என்று அல்லாஹ் கூறியுள்ளான். தமிழ் மிகவும் பழமையான மொழியாகும். நிச்சயமாக தமிழ் மொழியிலும் பல நபிமார்கள் வந்திருக்கலாம் என்பதை மேற்படி வசனங்கள் உணர்த்துகிறது.                                               

கி.பி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிந்து வழியாக இஸ்லாத்தின் வருகை

தென்னிந்தியாவில் இருந்து சில அனாதைச் சிறுவர்களும் சில விதவைப் பெண்களும் ஒரு பாய் மரக் கப்பலில் அரபு தேசத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த கப்பல் சிந்து மாகாணத்தை ஒட்டிய கடல் பகுதி வழியாகத்தான் அரபு தேசத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது சிந்துவைச் சேர்ந்த சில கொள்ளைக்காரர்கள் அதனைத் தாக்கி முஸ்லிம் பெண்களையும் சிறுவர்களையும் கடத்திச் சென்று விட்டார்கள். அரபு தேசத்தை நோக்கி வந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு இப்படியொரு கொடுமை நடந்த விபரம் அப்போதைய அரபு தேசத்தின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸபுக்கு தெரிந்தவுடன் அவர்களை விடுவிக்கும்படி சிந்து ராஜாவுக்கு கடிதம் எழுதினார். கடல் கொள்ளையர்கள் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று ராஜா பதில் எழுதி விட்டார். இந்த பதிலுக்குப் பின் ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் நிர்பந்தமாக சிந்துவை நோக்கி படையை அனுப்ப நேர்ந்தது முதல் இரண்டு படையெடுப்பிலும் முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். மூன்றாம் படையெடுப்பில் முஸ்லிம் ராணுவத்திற்கு பதினேழு வயது நிறைந்த முஹம்மது இப்னு காசிம் தளபதியாக இருந்தார். அவரின் வீரத்தாலும், யுக்தியாலும் முஸ்லிம்  ராணுவத்திற்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான். முஸ்லிம்கள் சிந்து முழுவதையும் கைப்பற்றினார்கள். அதற்கு முன்பு சிந்து மக்கள் அவர்களின் அரசர்கள் மூலமாக பல்வேறு அநீதிகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த விதம் அவர்களுக்கு மாபெரும் ஆறுதலாக இருந்தது. முஸ்லிம்களின் இந்த அனுகுமுறையைக் கண்டு இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். மதவிஷயத்தில்யாரையும் நாங்கள் கட்டாயம் செய்யவில்லைவிரும்பியவர் மட்டும் இஸ்லாமை ஏற்கலாம் என முஹம்மது இப்னு காசிம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள். இதற்குப் பின்பு இஸ்லாம் இன்னும் வேகமாக வட மாநிலங்களில் பரவியது. இதில் அதிகம் பயனடைந்தவர்கள் ஜாட் வகுப்பைச் சார்ந்தவர்கள் தான்.  இவ்வாறு சிந்து பஞ்சாப் மற்ற மாநிலங்களிலும் இஸ்லாம் பரவியது       

நபி ஸல் அவர்களின் காலத்திற்கு அடுத்த காலத்தில் இந்தியாவில் இஸ்லாம் பரவ ஆரம்பித்து வரலாறு

இந்த நாட்டில் மிகச் சிறந்த கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கொண்டு வந்ததில் அரபு முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த பங்கு உண்டு. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் அரபிக்கடல் வழியேவணிகர்களாக  தென்னிந்தியாவுக்கு கேரளாவுக்கு முஸ்லிம்கள் வந்த போது அவர்களின் நேர்மை நாணயம் இதையெல்லாம் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றனர். அதற்கு முன்பே அதாவது நபி ஸல் இருக்கும்போதே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொடுங்கலூரில் சேரமான்பெருமான் என்ற அரசர் சந்திரன் பிளந்த நிகழ்வைக் கண்டு அதன் பிண்ணனியில் அவர் மக்கா சென்று இஸ்லாத்தை ஏற்று திரும்பும் வழியில் இறந்தார். எனினும் தன்னோடு அழைத்து வந்த மாலிக் இப்னு தீனார் ரழி அவர்கள் மூலம் ஊருக்கு கடிதம் கொடுத்தனுப்பி கி.பி 612-ல் கொடுங்களூரில் இந்தியாவின் முதல் மஸ்ஜித் கட்டப்பட்டது.                                                           

 என்ற வார்த்தை தான் மருவி கேரளா என்று மாறியதாக கூறுவர் ஏனெனில் அப்போதே அந்த பூமி செழிப்பானخير الله

பூமியாக இருந்ததால் வளம் நிறைந்த அல்லாஹ்வின் பூமி என்று கூறிஅதுவே கேரளா என மாறியதாம்.

இன்றைக்கும் கேரளாவை GOD’S OWN COUNTRY என்பர். அது அந்த அரபு வார்த்தையின் பொருளாகும்

இந்தியாவுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வளவு நெருங்கிய இருந்ததால் தான் இந்திய மண்ணை அந்நியர்களிடம் விட்டுக் கொடுக்க முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த நேரத்தில் மூத்த ஆலிம்களுக்குள் உரையாடல் நடைபெற்றது நாமும் பாகிஸ்தானுக்குச் சென்று விடுவோம். இனிமேல் அது தான் நமக்குப் பாதுகாப்பான ஒரு நகரம் என்று சில ஆலிம்கள் முடிவெடுத்த நேரத்தில் ஹுசைன் அஹ்மது மதனீ ரஹ் மற்றும் அவர்களுடன் இருந்த நம்முடைய முன்னோடிகளான ஆலிம்கள் அதை மறுத்து நாம் எதற்காக இந்த மண்ணிலிருந்து வெளியேற வேண்டும். இது நாம் பிறந்த மண். நாம் பிறந்த நாடு. கடைசி வரை இங்கே இருந்து நாம் போராட வேண்டும் என்று அறிவுரை கூறி அந்தச் செய்தியை மக்களிடம் பரப்பினார்கள். அதாவது நம்மை யாரும் நிர்பந்தமாக வெளியேற்றாமல் நாம் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்ற கொள்கையை மக்களிடம் பரப்பினார்கள்.   

இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி  பிரபல எழுத்தாளர்...

1975 டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான இல்லஸ்டிரேட்டட் வீக்லிஎன்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”.

டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னமான இந்தியா கேட் எனும் பகுதியில் இந்தியாவுக்காக  உயிர் நீத்த 95,300 இராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945  பேர் முஸ்லிம்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள்

 ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஷைகுல் ஹிந்த் எனப்படும் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் சிறையில் இருக்கும்போது ஆங்கிலேயர்கள் தன் கையை தொட்டு விட்டால் அந்தக் கையைக் கழுவாமல் எந்தப் பொருளையும் தொட மாட்டார்கள் எனவே தான் ஒரு ஆங்கிலேயன் கூறுவான் மஹ்மூதுல் ஹஸன் அவர்ளை மால்டா சிறையில் எந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்தார்கள் என்பதை அவர்கள் வஃபாத்தான பின் குளிப்பாட்டும்போது தான் உணர முடிந்தது.  அதாவது அவர்களை குளிப்பாட்டும்போது இடுப்பில் சதையே இல்லை அது பற்றி அவருடன் சிறையில் இருந்த ஹுஸைன்அஹ்மத் மதனீ ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆங்கிலேயர்கள் இரும்பை பழுக்க காய்ச்சி அவரது இடுப்பில் சூடு வைப்பார்கள் அதனால் தான் அவரது இடுப்பில் சதையே இல்லை என்றார்கள் 

காந்தியை பிரபலப்படுத்தியது மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள்

காந்திக்கு மகாத்மா என்று பட்டம் கொடுத்தது மெளலானா அப்துல் பாரீ ரஹ் அவர்கள்

ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த நால்வரையும் 1920 ஜூன் 20- ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் மால்டா விலிருந்து மும்பை துறைமுகத்திற்கு அழைத்து  வரப்பட்டனர். அப்போது  ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் ரஹ் அவர்களை வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்திஜியும் ஒருவர்.பிறகு மும்பையில் ஒரு அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே ?  என்று கேட்டு அவரையே அதாவது காந்தியையே தலைவராக நியமிக்கச் சொன்னார்கள்.  அதன் பின்பு  காந்தியை தலைவராக அறிமுகப் படுத்தவும் மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒருகூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ ரஹ் அவர்கள்தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது.

சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி உதவி செய்ததில் முஸ்லிம் பிரமுகர்களின் மாபெரும் பங்களிப்பு.

 போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்த போது  ஆச்சரியத்தால் விரிந்தது.காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது  பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக் காசோலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார்.  ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் 

மருத நாயகம் என்னும் கான் சாகிபு

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர். இவரது உடலும் தலையும் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டது. அவரது தலை அடக்கம் செய்யப்பட்ட இடம் மதுரை அருகே சம்மட்டி புரத்தில் உள்ளது.

 

இந்தியாவின் முதல் தேசிய கீதம்    கவிஞர் அல்லாமா இக்பால்  அவர்கள் பாடியதாகும்

   நாடு விடுதலையான நேரத்தில் 1947  ஆகஸ்டு 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக 12 மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் தற்போதுள்ள ஜனகனமணஅல்ல: தேசிய கீதமாக ஒலித்தது அல்லாமா இக்பாலின்ஸாரே ஜஹான்ஸே அச்சா   ஹிந்துஸ்தான் ஹமாரா எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை இயற்றியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அந்தப் பாடல் ஓரம் கட்டப்பட்டது

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திப்பு இருந்தார். இந்திய அரசர்களும், மன்னர்களும் திப்புவுக்கு நேசக்கரம் நீட்டியிருந்தால் ஆங்கிலேய ஆட்சி சுமார் 100 வருடம் முன்பே முடிவுக்கு வந்திருக்கும்.  ஆனால் நம் நாட்டு குறுநில மன்னர்கள் வெள்ளையர்களின் வரவேற்பாளர்களாக இருந்தார்கள் திப்புவின் சுதந்திர உணர்வுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சதியில் சிக்கி இருந்தார்கள். ஆங்கிலேயர்களையும், ஆங்கில மொழியையும், அவர்களின் அரசில் பணிபுரிவதையும் அதிகம் வெறுத்து ஒதுக்கியவர்கள் முஸ்லிம்கள் தான். அந்த ஆங்கிலேய வெறுப்பு சுதந்திரத்திற்குப் பின்பும் தொடர்ந்ததால் தான் படிப்பு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முஸ்லிம்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். எந்த ஆலயங்களிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரம் நடைபெறவில்லை. ஆனால் ஒவ்வொரு மஸ்ஜிதிலும்  ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்றன. ஆலிம்கள் ஜும்ஆ மேடைகளில் மார்க்கத்தை மட்டும் பேசாமல் சுதந்திரத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினர். அதனால் தான் ஆங்கிலேயர்கள் பெருமளவில் ஆலிம்களைக் கொன்றனர். மூவாயிரம் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. மஸ்ஜிதில் தொழுகை நடைபெறும்போதே ஆங்கிலேயர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மஸ்ஜிதின் சுவர்களையும் துளைத்துக் கொண்டு உள்ளே இருந்தவர்களை குண்டுகள் பதம் பார்த்த வரலாறும் உண்டு  இப்படிப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்களை பின்வரும் சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பாசிச சக்திகளும், பாசிச ஊடகங்களும் மறைத்து வருகின்றன. வெள்ளையர்களுக்கு ஏவலாளிகளாக இருந்தவர்கள் இன்று தேசியவாதிகளாக வேடமிடுகிறார்கள்.ஆங்கிலேயர்களுக்கு அன்று அடிபணிந்து போகாமல் சுதந்திர உணர்வுக்கு முன்னோடிகளாக இருந்த முஸ்லிம்கள் இன்று சுதந்திரத்திற்குப் பிறகு நிமிர்ந்து நிற்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பெற்றோர்களை,மனைவி மக்களைப் பிரிந்து வியர்வை சிந்தி உழைத்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.                                                  

சுதந்திரப் போராட்டத்திற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்திய காயிதே மில்லத் ரஹ்

தாயகம் மீது படையெடுத்து  வருபவர்கள் முஸ்லிம்களாயினும் துரத்தும் பரம்பரை நாங்கள் என முழங்கி காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் காயிதே மில்லத் அவர்கள்

இந்தியாவிற்கும், இஸ்லாத்திற்கும் எதிரான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ஆலிம்களில் சிலரைப் பற்றி..

பள்ளப்பட்டி  மணிமொழி மெளலானா எனும் எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவீ (ரஹ்

29 -01 -1905ல் பள்ளப்பட்டியில் பிறந்தவர். குடியேறியவர், மணி மொழி பத்திரிக்கை ஆசிரியர், படிப்பை பாதியிலேயே  உதறியவர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்த அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். 1946 டிசம்பர் 5ல் ரஜிலா  என்ற கப்பலில் சென்னை வந்தார். தாயார்  இறந்து இரண்டு வருடங்கள் ஆகிய செய்தியை  அப்போது அறிந்தார் நேதாஜியின் படை வரிசையில் நாட்டு விடுதலைக்கு வீட்டையும்  மறந்து தியாகம் செய்தவர் மணிமொழி மெளலானா. (மணிமொழி மெளலானா அவர்கள் பயன்டுத்திய பல அறிய நூல்கள் மதரஸா  காஷிஃபுல் ஹுதா நூலகத்தில்  உள்ளன)

                திண்டுக்கல் ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி

26-11-1876ல் சேலம் ஆத்தூரில் பிறந்தவர். ஹாஜி காதிர்  முஹ்யித்தீன் இராவுத்தர்  அவர்கள் புதல்வர் கிலாபத்  இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும்  உச்சத்திலிருந்தபோது  திண்டுக்கல்   நகரை தலைமையாக கொண்டு அதன் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்ததார். திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் கதர் அணியாத முஸ்லிம்களின் திருமணத்திற்கு  செல்வதில்லை என்ற கொள்கை உடையவர். கிலாபத், ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கேற்றார். மதுரை டவுன் ஹாலில் ராஜாஜி தலைமையில் நடந்த மது விலக்கு  பொதுக்  கூட்டத்தில் இரண்டு மணி நேரம் வீறு கொண்டு இவர் பேசியதற்குப்பின் வேறு எந்த பேச்சாளரும் பேசுவதற்கு பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர். இவரது '' இயற்கை மதம்'' நூலுக்கு ஈ.வெ.ரா. முன்னுரை எழுதியுள்ளார். 1955 ஜூன் 23ல் காலமானார் சிராஜுல்மில்லத்    அப்துஸ் ஸமது சாகிபின் தந்தையார் இவர்.

அல்லாமா நஹ்வி செய்யது அஹமது மெளலானா-

அல்ஹிதாயா, கமருஸ்ஸமான், காலச்சந்திரன் ஆகிய இதழ்களின் ஆசிரியரான அல்லாமா நஹ்வி சையது அஹ்மது. மெளலானா தேசிய இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு கதராடை அணிந்து சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். தனது அல்ஹிதாயா பத்திரிக்கை மூலம் தேச விடுதலைக்கு வழிகளை அறிவித்தார். இவர் மீது சினங்கொண்ட ஆங்கிலேய  அரசாங்கம்   இவரை சிறையில் தள்ளியது. 1948 சுதந்திர இந்தியாவில் மரணத்தை தழுவினார்.

ஷைகு  அப்துல் காதிர் ஆலிம் சாஹிப்- 1885 இராமநாதபுரம் நம்புதாளையில் பிறந்து. நைனா முகம்மது ஆலிம்  சாஹிபிடம் கல்வி பயின்ற இவர் கிலாபத்     இயக்கப் போரில் பெரும்  தொண்டாற்றினார். 1955ல் காலமனார்.   -  அமானி ஹள்ரத்- 1893 ஜூலை 23ல் இராயவேலூரை அடித்த  பள்ளி கொண்டாவில் ஹாஜி மெளலானா அப்துல் ரஹீம் புதல்வராகப் பிறந்தார். கிலாபத் இயக்கத்தில் தீவிரப்  பணியாற்றினார். 1958ல் ஷைகுல் மில்லத் பட்டம் காயிதே மில்லத் அவர்களால்   அன்னாருக்கு வழங்கப்பட்டது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்லாமிய வெறுப்பை விதைக்கும் ஊடகங்கள்

 08-11-2024   بسم الله الرحمن الرحيم   இஸ்லாமிய வெறுப்பை  விதைக்கும் ஊடகங்கள்      https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில...