அவதூறு திரைப்படங்கள்நாம் என்ன செய்ய வேண்டும்.
பத்திரிக்கைகளின் மூலமாக மற்றும் பல மீடியாக்கள் மூலமாக எப்படியெல்லாம் முஸ்லிம்களைப் பற்றித் தவறாக சித்தரிக்க முடியுமோ அப்படியெல்லாம் சித்தரித்துக் காட்டும் எதிரிகள் திரைப்படங்களின் மூலமாக முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரித்துக் காட்டும் வேலையை வேகப்படுத்தியுள்ளனர். ரோஜா, விஸ்வரூபம் ஆகிய படங்களில் வரிசையில் தற்போது புர்கா, கேரளா ஸ்டோரி ஆகிய திரைப் படங்கள் மூலமாகவும் முஸ்லிம்களைப் பற்றி தவறாக சித்தரித்துக் காட்ட முயற்சிக்கின்றனர். இதற்கு ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவிப்பதாலும் அந்த திரைப்படங்களை திரையிட விடாமல் தடை உத்தரவு வாங்குவதால் மட்டுமே நாம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியாது. அதை விடவும் முக்கியமாக நாம் செய்ய வேண்டிய மிகப் பெரிய வேலை உள்ளது. அது விரைவில் முடிந்து விடுகிற வேலை கிடையாது. சில வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் அது தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு.
எந்த அளவுக்கு நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை விதைக்கிறார்களோ அந்த அளவுக்கு நம்மைப் பற்றிய நல்ல கருத்துக்களை மாற்று மதத்தவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். சூழ்நிலைக்கு தக்கவாறு தலைப்புகளை எடுத்து மிக அருமையாக நாம் ஜும்ஆ உரை நிகழ்த்தினாலும் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய்ச் சேருவதில்லை. பல மஸ்ஜித்களில் ஜும்ஆ உரை முடிந்து குத்பா முடியும்போது வந்து சேருபவர்கள் தான் அதிகம்.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் சதி வேலை என்றைக்கோ துவங்கி விட்டது
இந்தியா, பாகிஸ்தான் பிரிந்த பின் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே கலவரம் ஏற்பட்ட போது அதில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்செய்தி காந்திஜீக்கு சொல்லப்பட்ட போது காந்திஜீ அப்போதைய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலை தம்மை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார். முஸ்லிம்கள் கொல்லப்படுவது பற்றித்தான் அழைத்துள்ளார் என்று புரிந்த பட்டேல் “காந்திஜீக்கு கிடைத்த தகவல் மிகைப்படுத்தப்பட்டவை” என்றும்“முஸ்லிம்கள் அந்த அளவு கொல்லப்படவில்லை” என்றும் பதில் அனுப்பினார்.
அபுல் கலாம் ஆசாத் கூறுகிறார்- நானும், நேருவும், பட்டேலும் காந்திஜீயுடன் பேசிக்கொண்டிருந்தபோது நேருஜீ கவலையுடன் “முஸ்லிம்களை நாய்களையும், பூனைகளையும் கொல்வது போல கொல்கிறார்கள். அதைத் தடுக்க தம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே” என்று வருத்தப்பட்ட போது அருகில் இருந்த பட்டேல் நேருவின் புகார்கள் அனைத்தும் ஆதாரமாற்றவை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. என்று கூறி உண்மையை மறைத்து பதில் கூறினார். காந்திஜீயால் ஒன்றும் பேச முடியவில்லை. அதற்குப் பிறகு பட்டேல் என்ன செய்தார் தெரியுமா? முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயம் தான் என்று காட்டுவதற்காக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஆபத்தான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், டில்லியில் உள்ள இந்துக்களையும், சீக்கியர்களையும் தாக்குவதற்காக அவைகளை முஸ்லிம்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் சில நாட்கள் கழித்து செய்தி வெளியிட்டார். நாங்கள் மந்திரி சபை கூட்டத்திற்கு சென்ற போது சர்தார் பட்டேல் எங்களை நோக்கி முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அடுத்த அறையில் உள்ளன. அதைப் பார்த்து விட்டு வந்து கூட்டத்தை ஆரம்பிப்போம் என்றார். நாங்கள் அங்கு சென்று மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்தோம். அங்கு துருப்பிடித்த சமையலறைக் கத்திகள், தண்ணீர் குழாய்கள், தடுப்பு வேலியிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிகள் ஆகியவை இருந்தன. அவற்றைக் காட்டி இவை சீக்கியர்களையும், இந்துக்களையும் கொலை செய்ய முஸ்லிம்களால் திரட்டி வைக்கப்பட்ட ஆயுதங்கள் என்றார் பட்டேல். அப்போது அங்கிருந்த மவுன்ட் பேட்டன் பிரபு அந்தக் கத்திகளை எடுத்துப் பார்த்துக் கொண்டே கிண்டலாகவும், கேலியாகவும் சொன்னாராம் “இந்த ஆயுதங்களை சேகரித்தவர்களுக்கு அபாரமான கற்பனை வளம் உள்ளது. இவைகளைக் கொண்டு டில்லியைக் கைப்பற்றலாம் என்று கற்பனை செய்கிறார்கள் போலும்” என்றார்.
(மெளலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய நூலில் இருந்து.. நன்றி சமநிலைச் சமுதாயம்)
அன்று பட்டேல் செய்த வேலையை இன்று வரை ஆட்சியாளர்களில் பலரும், ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன.
நம்மைப் பற்றிய தவறான சிந்தனைகளை விஷமிகள் விதைக்கக்கூடாது என்பதற்காக
முன் கூட்டியே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நபியின் சுன்னத்
عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ بَابِ الْمَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنْ الْإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا (بخاري 3101
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்தபோது அன்சாரிகளில் இருவர் கடந்து சென்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்விருவரும் சலாம் கூறினர். அப்போது அவ்விருவரிடமும் நபி (ஸல்) அவர்கள், ‘‘சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்” எனக் கூறினார்கள்.அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக் கும் பெரிய விஷயமாகப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிச்சய மாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்துவிடுவானோ என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள்.
இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்ற செய்தியை உலகெங்கும் பரப்ப வேண்டும்
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَاا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا (32)المائدة
عَنْ أَنَسِ رَضِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْبَرُ الْكَبَائِرِ الْإِشْرَاكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَوْلُ الزُّورِ أَوْ قَالَ وَشَهَادَةُ الزُّورِ (بخاري)
இஸ்லாம் அன்பை போதிக்கும் மார்க்கம் என்பதை மாற்றார்களுக்கு உணரச் செய்ய வேண்டும்
عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« الْمُؤْمِنُ مَأْلَفٌ وَلاَ خَيْرَ فِيمَنْ لاَ يَأْلَفُ وَلاَ يُؤْلَفُ (حاكم)
ஒரு முஃமின் அன்பின் பிறப்பிடம் ஆவார். எவர் பிறரை நேசிப்பவராகவும் பிறரால் நேசிக்கப்படுபவராகவும் இல்லையோ அவரிடம் எந்த நலவும் இல்லை
சமய நல்லிணக்கத்தை போதிக்கும் அல்குர்ஆன்
وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ (الانعام108)
حكمها باق في هذه الأمة على كل حال فمتى كان الكافر في منعة وخيف أن يسب الإسلام أو النبي عليه السلام أو الله عز وجل فلا يحل لمسلم أن يسب صلبانهم ولا دينهم ولا كنائسهم ولا يتعرض إلى ما يؤدي إلى ذلك لأنه بمنزلة البعث على المعصية (قرطبي)
அவர்கள் அல்லாஹ்வையன்றி எவற்றை வணங்குகிறார்களோ அவற்றை நீங்கள் திட்ட வேண்டாம். பதிலுக்கு அவர்கள் அறிவற்ற முறையில் அல்லாஹ்வைத் திட்டுவார்கள். அல்-குர்ஆன்- 6-108
மேற்படி ஆயத்தின் விரிவுரையில் இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள் “இச் சட்டம் இன்று வரை நடைமுறையில் உள்ளது. பிற மதத்தவர்கள் நம்முடன் இணங்கி வாழ்ந்து, அல்லாஹ்வையோ அவனது தூதரையோ விமர்சிக்காமல் இருக்கும் நிலையில் நாம் அவர்கள் வணங்குகின்ற சிலைகளைத் திட்டுவதும், அவர்களுடைய ஆலயங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கூடாது. அவ்வாறு விமர்சித்தால் பதிலுக்கு அவர்கள் உண்மையான நம்முடைய தீனை விமர்சிப்பார்கள். நம்முடைய தீன் விமர்சிக்கப்படுவதற்கு நாமே காரணமாகி விடுவோம்.
(குறிப்பு-ஆனால் இஸ்லாத்தைப் பிறருக்கு மென்மையாக எடுத்துரைப்பது தவறல்ல.)
மாற்று மதத்தவரிடம் நட்புறவு பற்றி....
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (الممتحنة:8)
عن جَرِير بْن عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ لَا يَرْحَمُهُ اللَّهُ-(ترمذي) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاحِمُونَ يَرْحَمُهُمْ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ (ترمذي- بَاب مَا جَاءَ فِي رَحْمَةِ النَّاسِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ
மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் தான் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான் - திர்மிதீ
இஸ்லாமிய அரசில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்கள் நம் பாதுகாப்பில் உள்ளவர்கள். எனவே அவர்களின் உயிர் நம் உயிர் போன்றது என நான்காவது ஜனாதிபதி அலீ (ரழி) கூறினார்கள். நூல்:அபூதாவூத்
நம்முடைய முன்னோர்கள் மாற்று மதத் தலைவர்களுடன் சந்திப்புகளை அதிகம் நடத்தியுள்ளனர். அதனால் அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் பகைமை குறைந்து காணப்பட்டது
அலீமியான் ரஹ் என்று அழைக்கப்படும் அபுல் ஹஸன் அலீ நத்வீ ரஹ் அவர்கள் இந்திய உலமாக்களில் பிரபலமானவர்கள் 1999-ல் இந்த உலகை விட்டும் மறைந்தார்கள். அவர்களின் தமது பல்வேறு நூல்களை தொகுத்துள்ளார்கள். அரபிக்கல்லூரிகளில் ஓதித் தரப்படும் கிராஅத்துர் ராஷிதா, கஸஸுன் னபிய்யீன் ஆகிய நூல்களும் அவற்றில் அடங்கும். அவர்கள் தமது வாழ்நாளில் மாற்று மதத் தலைவர்களுடன் சந்திப்புகளை அதிகம் நடத்தியுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் பின்வருமாறு- 1992-ல் அலீமியான் ரஹ் அவர்கள் தமிழகம் வந்திருந்த நேரத்தில் அப்போதைய காஞ்சிப் பெரியவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு நடைபெற்றது. அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்களை இருவரும் பேசினார்கள். அப்போது காஞ்சிப் பெரியவரே சொன்னார். எங்களின் கோவிலுக்கு அருகிலேயே பள்ளிவாசல் உள்ளது. என்னோடு இருப்பவர்களில் சிலர் என்னிடத்தில் இந்தப் பள்ளிவாசலில் இருந்து தினமும் கூறப்படுகின்ற பாங்கு சப்தம் குறிப்பாக அதிகாலை பாங்கின் சப்தம் உங்களுக்கு இடையூறாக இருக்குமல்லவா அதை நிறுத்தி விடச் சொல்லலாமா என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடம் சொன்னேன். எக்காரணம் கொண்டும் அதை நிறுத்தக் கூடாது. ஏனெனில் தினமும் அந்த சப்தம் கேட்டுத்தான் நான் அதிகாலையில் எழுகிறேன். எனவே அதை நிறுத்த வேண்டாம். - நூல் தஃமீரே ஹயாத்
மேலும் காஞ்சிப் பெரியவர் தமக்கு நெருக்கமான முஸ்லிம் நண்பர்களைக் கண்டால் நீங்கள் ஒருநாளில் எத்தனை வேளை தொழுகிறீர்கள் என்று கேட்பார். அவர்கள் நாங்கள் தினமும் ஐவேளை தொழுவோம் என்று கூறினால் அதற்கு அவர் தினமும் நீங்கள் ஆறு தடவை தொழ வேண்டும் அல்லவா என்று அதிகாலை தஹஜ்ஜத் தொழுகையைப் பற்றி அவர் நினைவு கூறுவார். இந்த அளவு பிற சமயப் பெரியவர்களுடன் நம் முன்னோர்களின் தொடர்புகள் இருந்துள்ளது. அந்த தொடர்புகளால் காரணமாக மத அடிப்படையில் மோதல்கள் குறைந்திருந்தன.
சமய நல்லிணக்கத்தை நீடிக்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தேசியக் கொடி
தேசியக் கொடியின் காவி நிறம் இந்துக்களையும், பச்சை நிறம் முஸ்லிம்களையும், வெள்ளை நிறம் மற்ற மதத்தவரையும் குறிக்கும். அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் நம் முன்னோர்கள் இதை வடிவமைத்தார்கள். இதை வடிவமைத்தவர் ஒரு முஸ்லிம் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேதுபதி மன்னர்களுடன் வள்ளல் சீதக்காதி அவர்களின் தொடர்பு
சேதுபதி மன்னர்களைப் பற்றி வரலாற்றில் நாம் அறிந்திருப்போம். (ஷீது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களைத் தான் சேதுபதி மன்னர்கள் என்றும் கூறப்படுகிறது.) இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களில் ஒருவர் விஜயரகுநாத சேதுபதி. இவர் 1713- TO 1725 வரை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கீழ் அப்போது கீழக்கரையும் இருந்தது. இவரது ஆட்சியின்போது கீழக்கரை சதக்கத்துல்லா அப்பாவை தனது மந்திரி சபையில் இடம்பெற இவர் அழைத்தபோது எனக்கு அதில் விருப்பமில்லை. வேண்டுமானால் உங்களுக்கு நல்ல நபரை நான் தருகிறேன் என்று கூறி வள்ளல் சீதக்காதி அவர்களை சதக்கத்துல்லா அப்பா அறிமுகப் படுத்தினார். அதன்படி வள்ளல் சீதக்காதி சேதுபதி மன்னரின் மந்திரி சபையில் இடம்பெற்றார். அப்போது இராமேஸ்வரம் தீவில் பெரிய ஆலயம் எழுப்ப வேண்டும் என மன்னர் ஆசைப்பட்டபோது அதற்கான பொறுப்பை வள்ளல் சீதக்காதியிடமே ஒப்படைத்தார். எந்தப் பகுதியில் இருந்து கற்களைச் சேகரித்துக் கட்டினால் கட்டிடம் நிலைத்திருக்கும் என்றெல்லாம் நன்கு ஆய்வு செய்து வள்ளல் சீதக்காதி அந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார். வாலி நோக்கம் பகுதியிலிருந்து 100 யானைகளில் ஆலயம் கட்டத் தேவையான தூண்கள் இராமேஸ்வரத்திற்கு சுமந்து வரப்பட்டன. ஆலயம் கட்டி முடித்த பின் மிச்சத் தூண்கள் இருந்தன. அதை வைத்து கீழக்கரையில் ஒரு ஆலயம் எழுப்பி விடலாமா? என்று வள்ளல் சீதக்காதி கேட்டபோது “வேண்டாம். கீழக்கரை என்பது முஸ்லிம்கள் நிறைந்த இடம். அங்கு கோவில் கட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. வேண்டுமானால் ஒரு பள்ளிவாசல் கட்டுங்கள்” என்று மன்னர் கூறினார். அதன்படி அங்கு பள்ளிவாசல் கட்டப்பட்டது. -
சமய நல்லிணக்க விழாவில் மெளலவி இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் பேசியது
அன்னைதெரசா அவர்களின் சமூக சேவைக்கு உதவியாக இருந்த முஸ்லிம்கள்
நோபல்பரிசு பெற்ற சமூகசேவகி அன்னைதெரசா அவர்கள் கொல்கத்தாவில் கருணை இல்லம் ஒன்றை நடத்தி வந்தார். 54-A லோயர் சக்கினார் ரோடு என்ற முகவரியில் அந்த இல்லத்தை அன்பளிப்பாக வழங்கியவர் கருணை உள்ளம் படைத்த அர்ஷத் என்ற ஒரு முஸ்லிம் சகோதரரே ஆவார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை வளர்த்ததும் முஸ்லிம்கள் -சமய நல்லிணக்க விழாவில் மெளலவி இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் பேசியது
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றிய வரலாற்றில் அவர் முஸ்லிம்கள் மீது மிகுந்த பாசமுள்ள தலைவராக இருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் பிரிந்த நேரத்தில் முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் இந்த நாட்டை விட்டும் சென்று விடக்கூடாது. அவர்கள் இந்த மண்ணில் இருக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். நூல்- தேவரின் உதவியாளர் பெருமாள் எழுதிய புத்தகம்
கப்பலோட்டிய தமிழன் என்னும் மகத்தான சாதனை படைத்த வ.உ.சி அவர்களுக்கு கப்பல் வாங்கித் தருவதில் பெரும்பங்கு வகித்தவர் ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்றஒரு முஸ்லிம் சகோதரர் ஆவார்.
மறைந்த தமிழக முன்னாள்முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சுயமரியாதை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் திருவாரூரில் கொலை வெறிபிடித்த ஒரு கும்பல் அவரைக் கொன்றொழிக்கத் துடித்த நேரத்தில் அவரின் உயிரைக் காப்பாற்றியதும் ஒரு முஸ்லிம் குடும்பம் தான்.
நம்மைப் பற்றிய தவறான பிரச்சாரங்களை ஒழிக்க நாம் செய்ய வேண்டியவை
நம் வீட்டு வைபவங்களில் நமக்கு அருகிலுள்ள பிற சமய சகோதரர்களை அழைக்க வேண்டும். அவர்களின் சிரமங்களைக் குறைப்பதில் பங்கெடுக்க வேண்டும். இதுவும் நபிகளார் காட்டித் தந்த நடைமுறைகளில் ஒன்றாகும்.
நமது மஹல்லா மஸ்ஜிதில் அவ்வப்போது நடைபெறும் விழாக்களில் பிற சமய சகோதரர்களை, குறிப்பாக மத குருமார்களையும் காவல்துறையினரையும், அரசு அதிகாரிகளையும் அழைத்து சமய நல்லிணக்க விழாக்கள் நடத்தி அவர்களை கண்ணியப் படுத்துவதுடன் அவர்களின் நாவினால் நம்முடைய இஸ்லாத்தைப் பற்றிய நல்ல கருத்துக்களைச் சொல்ல வைக்க வேண்டும்.
ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் குழந்தைகளுக்கு ஓதிப் பார்க்க வரும் பிற சமய சகோதரர்கள் அமருவதற்கு சிறந்த இட வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன் முடிந்தால் ஸ்நாக்ஸ் ஏதேனும் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். சென்னையில் ஒரு மஸ்ஜிதில் இவ்வாறு தொடர்ந்து செய்ததன் பலனாக இஸ்லாம் மீது நல்ல எண்ணம் ஏற்பட்டு சிலர் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
நமது வாகனங்களில் மாற்றார்களின் மனதை ஈர்க்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்ல நபிமொழிகளை எழுதி ஒட்ட வேண்டும்.மருத்துவமனைகளுக்கு ஒரு குழுவாகச் சென்று மத பாகுபாடு பார்க்காமல் அங்குள்ள நோயாளிகளை நலம் விசாரிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கித் தர வேண்டும். கிறிஸ்தவ மதம் பரவியது இப்படித்தான்.
மாற்றார்களுடன் வியாபாரம் செய்யும்போது நம்பிக்கை, நாணயம், குறைந்த லாபம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இஸ்லாம் இவ்வாறு தான் பரவியது.எல்லாவற்றும் மேலாக அனைத்து விஷயங்களிலும் நம்மிடம் இறையச்சம் மேலோங்க வேண்டும். நாம் அனைவரும் உண்மை முஃமின்களாக மாறி விட்டால் வெகு விரைவில் பாசிச ஆட்சியை அல்லாஹ் இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிவது நிச்சயம்.
மஹல்லா தோறும் முஸ்லிம் பள்ளிக்கூடங்களை உருவாக்க வேண்டும்
முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழ்வதற்காகவே நாடு முழுவதும் 16,000 பள்ளிக்கூடங்கள் செயல்படுகின்றன. அங்கு பயிலும் மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை ஊட்டுகிறார்கள். நாளடைவில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அந்த வெறுப்புணர்வு தீயாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விடுகிறது. முஸ்லிம்களைக் கண்டால் கொல்ல வேண்டும் என்ற வெறி பிடித்தவர்களாக ஆக்கப் படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் இதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தங்களுடைய தொழில் தங்களுடைய குடும்பம் என்ற சுயநலத்துடன் சமுதாய அக்கறையில்லாத சமூகமாக இருந்து வருகிறார்கள்.
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11) الرعد
ஒளரங்கசீப் ரஹ் அவர்களின் சமய நல்லிணக்கம்
காசியில் சைவ மடாலயங்களை அமைப்பதற்காக ஒளரங்கசீப் நிலங்களை வழங்கினார் என்று வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதேபோல் பல்வேறு கோவில்களுக்கு மானியம் வழங்கிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. உண்மை இவ்வாறிருக்க கீழ்காணும் வரலாற்றைத் திரித்து பொய்யான ஒரு செய்தியைப் பரப்புகின்றனர். பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார். தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற ஒரு இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக்கொண்டு கிடந்தாள். வசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது. இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.
இஸ்லாம் தீவிரவாத த்தை போதிக்கும் மார்க்கம் என்றிருந்தால் ஒரு கிறிஸ்தவர் தன் நூலில் உலகத்தலைவர்களின் வரிசையில் நபி ஸல் அவர்களுக்கு முதலிடம் கொடுத்திருக்க மாட்டார்
மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற தலைவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய சீர்திருத்தம் மற்றும் மாற்றங்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகம் அந்த நூறு மனிதர்கள். அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000 மனிதர்களில் சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார். வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார். அவ்வாறு அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான அம்சமாகும். இந்த நூல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. மைக்கேல் ஹர்ட வரிசைப்படுத்திய விதம் குறித்து பல்வேறு கருத்துக்களும் மறுப்புகளும் சில மதவாதிகளால் எடுத்து வைக்கப்பட்டது. காரணம் இந்த நூலில் ஹர்ட் இஸ்லாமிய தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்து கிருத்துவ கடவுளாக கருதப்படும் ஏசுநாதருக்கு 3ம் இடம் கொடுத்ததுமே காரணம். பெரும்பான்மையான கிருத்தவர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று அவர் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தார் மைக்கேல் ஹர்ட்.
இஸ்லாத்தை மேலோட்டமாக பார்த்து தவறாக விளங்குபவர்களுக்கு அறிஞர் அண்ணா கூறியது
பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கி விட்டே தின்பார்கள். அதுபோல் மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.
முஹம்மத் நபியின் நற்குணங்கள் எனக்கு பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கை பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். கூடியவிரைவில் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுவிடும் என்று நம்புகிறேன். – பெர்னாட்ஷா
ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபி பெருமான் வகுத்த சீர்த்திருத்தங்களை பின் பற்றி நடக்க வேண்டும். – மகாத்மா காந்தி
முஸ்லிம்களை தேச விரோதிகளாக புரிந்து வைத்திருப்பவர்களுக்கு நாம் சில செய்திகளை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காக முஸ்லிம்கள் இரத்தம் சிந்திய அளவுக்கு மற்றவர்கள் வியர்வை கூட சிந்தியிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட முஸ்லிம்களை தேச துரோகிகளாகவும், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற பாசிச கும்பலை தேச பக்தர்களாகவும் ஊடகங்களும், சில திரைப்படங்களும் சித்தரிக்கின்றன. எனவே முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்து விழிப்புணர்வு பெறுவதும், சினிமா மோகத்தை விட்டும் ஒதுங்குவதும் காலத்தின் கட்டாயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக